Last Updated : 24 Sep, 2013 09:11 AM

 

Published : 24 Sep 2013 09:11 AM
Last Updated : 24 Sep 2013 09:11 AM

தடைகளைத் தாண்டி மெட்ரோ ரயில் பணிகள் மும்முரம்

தடைகளைத் தாண்டி மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரத்தின்படி கோயம்பேட்டில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல் வரை இருவழியிலும் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் தண்டவாளம் பதிக்கப்பட்டுவிட்டது. அதுபோல 8.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுவிட்டது.

சோதனை ஓட்டத்திற்காக கோயம்பேடு பணிமனையில் 800 மீட்டர் நீள டெஸ்ட் டிராக்கும், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.32 கோடி மதிப்புள்ள 4 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரயிலும் தயாராக இருக்கிறது.

13 ஹெக்டேர் தனியார் நிலத்தை பெரிய பிரச்சினை இல்லாமல் ரூ.485 கோடி கொடுத்து கையகப்படுத்தியதால் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தங்குதடையின்றி நடக்கின்றன.

சென்னை மக்கள்தொகை

சென்னை மக்கள் தொகை 80 லட்சம். சென்னை மாநகருக்கு தினமும் வந்து செல்வோர் எண்ணிக்கை 20 லட்சம். தினமும் லட்சக்கணக்கானோர் பல்வேறு காரணங்களுக்காக பயணிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் நிதியைக் கொண்டு (ரூ.14,600 கோடி) மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

முதன்முதலில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை கோயம்பேட்டில் 10-6-2009 அன்று முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அன்றுமுதல் கோயம்பேடு - அசோக்நகர் இடையே பறக்கும் பாதை அமைக்கும் பணியை சோமா எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேற்கொண்டது. அதன்பிறகு அசோக்நகர் - பரங்கிமலை இடையே பறக்கும் பாதை அமைக்கும் பணியை வேறொரு நிறுவனம் மேற்கொள்ளத் தொடங்கியது

அதுபோல முதன்முதலாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்காவில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியை 28-7-2012 அன்று மத்திய நகர்ப்புறம் மற்றும் வீட்டு வசதித்துறை செயலாளரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் தலைவருமான சுதீர்கிருஷ்ணா தொடங்கி வைத்தார். அன்றுமுதல், சீனாவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட 11 ராட்சத டனல் போரிங் இயந்திரங்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

பறக்கும் பாதை, சுரங்கப் பாதை

மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருவழித்தடங்களில் நடக்கின்றன. முதலாவது வழித்தடம், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை (23 கிலோ மீட்டர்) செல்கிறது. இரண்டாவது வழித்தடம், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை (22 கிலோ மீட்டர்) செல்கிறது. நேற்றுவரை கோயம்பேடு - ஈக்காட்டுத்தாங்கல் இடையே இருமார்க்கத்திலும் 15.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு (15,200 மீட்டர்) பறக்கும் பாதையில் தண்டவாளம் பதிக்கப்பட்டுவிட்டது. நகரின் பல பகுதிகளில் 8.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு (8,200 மீட்டர்) சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. சுரங்கப் பாதை பணி 22 சதவீதம் முடிந்துவிட்டது.

13 ஹெக்டேர் தனியார் நிலத்துக்கு ரூ.485 கோடி

எந்த திட்டத்தை செயல்படுத்தும்போது தனியார் மற்றும் அரசு நிலங்களை கையகப்படுத்த வேண்டும். அப்போது நிச்சயமாக பிரச்சினை வரும். அதுபோல சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கும் வந்தது. பெரும்பாலான நிலம் அரசு நிலமாக இருந்ததால் பிரச்சினை பெரிதாக இல்லை. அதாவது 90 சதவீதம் மத்திய, மாநில அரசுகளின் நிலம், 10 சதவீதம்தான் தனியார் நிலம். மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக தனியார் நிலம் 32.5 ஏக்கர் (13 ஹெக்டேர்) உள்பட 175 ஏக்கர் (70 ஹெக்டேர்) நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியதிருந்தது. அரசு நிலங்களுக்குப் பதிலாக பெரும்பாலும் மாற்று நிலம், இடம் கொடுக்கப்பட்டுவிட்டது. பணம் பெரிதாக தரப்படவில்லை. தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து வழக்குகள் போடப்பட்டன. இதில், சென்னை அண்ணா சாலையில் பி.ஆர். அண்ட் சன்ஸ் அமைந்துள்ள கட்டடம் புராதன சின்னம் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு உள்பட பல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுவிட்டன. தற்போது சென்னை சென்ட்ரலுக்கு எதிரே ராமசாமி முதலியார் சத்திரத்துக்காக (புகாரி ஓட்டல் உள்ள இடம்) அரசு கொடுத்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு மட்டும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தனியார் நிலத்தை கையகப்படுத்துவதற்காக அதன் உரிமையாளர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மொத்தம் ரூ.485 கோடி இழப்பீட்டுத் தொகையாக கொடுத்துள்ளது.

தடைகளை தாண்டி வேகம் எடுக்கும் பணிகள்

நிலம் கையகப்படுத்தும்போது மட்டுமல்லாமல் திட்டப் பணிகளின்போதும் பல தடைகள் வந்தன. அதையும் தாண்டி மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. பச்சையப்பன் கல்லூரி அருகேயும், பரங்கிமலை அருகேயும் மெட்ரோ ரயில் வேலை நடந்தபோது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். வடசென்னையில் சுரங்கம் தோண்டுபோது ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் விரிசல் ஏற்பட்டது. சுரங்கம் தோண்டும் முன்பு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் வடசென்னை பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடும்படி மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொண்டது. ஒருவர் மட்டும் அதைச் செய்யாததால், சுரங்கம் தோண்டும் பணிக்காக சிமெண்டு கலவையை வேகமாக பீச்சி அடித்தபோது அவரது வீடு, கடைக்குள் சிமெண்ட் கலவை புகுந்துவிட்டது. இப்படி அங்கொன்றும், இங்கொன்றுமாக தடைகள் வந்தபோதிலும் ஓரிரு நாளிலேயே பணி தொடர்ந்தது.

அடுத்த ஆண்டு மத்தியில் முதல் ரயில் ஓடும்

முதல் கட்டமாக, கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை 11 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படும் பறக்கும் பாதையில் அடுத்த ஆண்டு மத்தியில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார். இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே 8 பறக்கும் ரயில் நிலையங்கள் உள்ளன. இதில், கோயம்பேடு, சி.எம்.பி.டி., (கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்) அரும்பாக்கம் ஆகிய 3 பறக்கும் ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணி முழுமையாக முடிந்து, உள்வேலைப்பாடுகள் வேகமாக நடக்கின்றன.

மூன்று தளங்களாக அமைக்கப்படும் கோயம்பேடு பறக்கும் ரயில் நிலையத்தில் 6 எஸ்கலேட்டர்கள் (நகரும் படிக்கட்டுகள்) நிறுவப்பட்டுவிட்டன. லிப்ட்டுகள் அமைக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் போக்குவரத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் பணிமனை, கோயம்பேட்டில் உலகத் தரத்தில் அமைக்கப்படுகிறது.

சோதனை ஓட்டம்

கோயம்பேடு பணிமனையில் 800 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு உள்ள டெஸ்ட் டிராக்கில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இங்கு சோதனை ஓட்டம் முடிந்த பிறகு, கோயம்பேடு வடபழனி இடையே பறக்கும் பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இப்படி படிப்படியாக பரங்கிமலை வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, பின்னர் கோயம்பேடு பரங்கிமலை இடையே 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு முழுமையாக சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதையடுத்து இந்தியன் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்தப் பாதையை ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கியதும் அடுத்த ஆண்டு மத்தியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மெட்ரோ ரயில் போக்குவரத்தை முறைப்படி தொடங்கிவைப்பார் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x