Last Updated : 23 Oct, 2015 04:09 PM

 

Published : 23 Oct 2015 04:09 PM
Last Updated : 23 Oct 2015 04:09 PM

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கும் எழுத்தாளர்களுக்கு எதிராக பேரணி

டெல்லியில் சாகித்ய அகாடமி நோக்கி எழுத்தாளர்கள் அமைதிப் பேரணி நடத்திய இதே நாளில், அந்த எழுத்தாளர்களுக்கு எதிராக ஒரு பேரணி நடைபெற்றுள்ளது.

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்த எழுத்தாளர்கள், 'சுயநலத்தால் உந்தப்பட்டவர்கள்' என்று இந்த எதிர்ப்பு பேரணியினர் கண்டனக்குரல் எழுப்பினர்.

தேசிய நலன் சார்ந்த கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கூட்டுச் செயற்குழு அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாகித்ய அகாடமியிடம் தீர்மானம் ஒன்றை கையளித்தனர். அதில் விருதைத் திருப்பி அளித்த எழுத்தாளர்களின் நோக்கங்களை கேள்விக்குட்படுத்தியதோடு, இதே எழுத்தாளர்கள்தான் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தனர் எனவே அவர்கள் எதிர்ப்பு அரசியல் நோக்கிலானது என்று சாடினர்.

பாஜக-வின் மாணவர் அமைப்பும் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டனர்,

இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் முறையிட்ட இதே எழுத்தாளர்கள் கொடுக்கும் அழுத்தத்திற்கு சாகித்ய அகாடமி பணிந்து விடக்கூடாது, அகாடமி தங்களது தன்னாட்சி தன்மையை பாதுகாக்க வேண்டும். இந்த எழுத்தாளர்கள் ஜனநாயக முறையற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் எதிர்ப்பு எதை நோக்கி? உண்மை என்னவெனில் விருதைத் திருப்பி அளித்த எழுத்தாளர்களில் ஒரு கவிஞர் சாகித்ய அகாடமி பதவிக்காக போட்டியிட்டு பரிதாபமாக தோல்வி அடைந்தார். தலைவர் பதவிக்கு தேர்தல் முறை தேவையில்லை என்றும் அரசே நேரடியாக தலைவரை நியமிக்க வேண்டும் என்று இவர் வலியுறுத்தினார்.

எனவே அரசுக்கு எதிரான இவர்களது போராட்டம் கொள்கை சார்ந்ததல்ல, மாறாக சுயநல நோக்கங்களே பிரதானமாக இருந்திருக்கிறது” என்று தங்களது தீர்மானத்தில் கூறியுள்ளனர்.

எதிர்ப்பு பேரணியைச் சேர்ந்த, சங்கீத் நாடக அகாடமியின் செயற்குழு உறுப்பினர், நளினி கமலினி தெரிவிக்கும் போது, “கலை, இலக்கியம், இசை ஆகியவை நாட்டின் பண்பாட்டு சொத்தாகும். இதுதான் நமது பலம். அவர்களது எதிர்ப்பு தூண்டிவிடப்பட்ட ஒன்று என்று தெரிகிறது. அது அப்படியில்லை எனில் முந்தைய சம்பவங்களின் போது ஏன் அவர்கள் இவ்வாறு செயல் படவில்லை?” என்று சாடினார்.

இதே நாடக அகாடமியைச் சேர்ந்த மாலினி அவஸ்தி, கூறும்போது, “இவர்களது எதிர்ப்பு 100% அரசியல் ரீதியாக தூண்டப்பட்டதே. இந்திய ஒற்றுமையை வலியுறுத்த எழுத்தாளர்கள் ஒன்றுபட வேண்டுமே தவிர ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது.

சில பிரச்சினைகளில் அவர்களது கூட்டு நினைவு எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்ந்த போது எங்கு இவர்கள் சவுகரியமாக உறங்கிக் கொண்டிருந்தார்கள்? காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் சஃப்தர் ஹஷ்மி அல்லது முசாபர் நகர் கலவரங்கள் ஆகியவை பற்றி இவர்களில் எவ்வளவு பேர் எழுதியுள்ளனர்?

இவர்கள் உத்திரப்பிரதேசத்துக்கோ, பிற மாநிலங்களுக்கோ சென்று போராட்டம் செய்தார்களா? ஆனால் இன்று சரியாக சிந்திக்கும் அனைவரையும் பாஜக ஆதரவாளர், சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் என்று முத்திரை குத்துகின்றனர்.” என்று சாடினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x