Published : 23 Oct 2015 04:06 PM
Last Updated : 23 Oct 2015 04:06 PM

அச்சுறுத்தலுக்கு அஞ்சேன்: கர்நாடகத்தில் தாக்கப்பட்ட இளம் தலித் எழுத்தாளர் உறுதி

இந்து மதத்திலிருந்து உருவான சாதி அமைப்பு பற்றி விமர்சித்து எழுதியதாக, கர்நாடகாவைச் சேர்ந்த இளம் தலித் எழுத்தாளர் ஹுச்சங்கி பிரசாத் என்பவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.

மூத்த கன்னட எழுத்தாளரும், முற்போக்கு சிந்தனையாளருமான எம்.எம்.கல்புர்கி கொலை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து நாடெங்கிலும் உள்ள எழுத்தாளர்கள் சகிப்பின்மையை எதிர்த்து வரும் சூழலில், அதே மாநிலத்தில் இளம் எழுத்தாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே பல்கலைக்கழகத்தில் இதழியல் மாணவரான ஹுச்சங்கி பிரசாத் (23) மீது சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிடப்பட்டதாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹுச்சங்கி தங்கியிருந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான விடுதிக்கு அதிகாலை நேரத்தில் வந்த சில மர்ம நபர்கள், ஹுச்சங்கியின் தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, மாணவரை அழைத்துச் சென்றனர்.

அவரை அழைத்துச் சென்றபோது வழியில் வேளாண்மை உற்பத்தி விற்பனைக் குழு (APMC) கட்டிடம் அருகே பதுங்கியிருந்த 10 பேர் கொண்ட கும்பல் வந்து ஹுச்சங்கியைத் தாக்கினர். இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பிரசாத் 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவிக்கும்போது, “அவர்கள் என்னைச் சுற்றி வளைத்து என்னை மாறி மாறி தள்ளத் தொடங்கினர். நான் சாதி அமைப்பு பற்றி விமர்சனம் செய்தது இந்து மதத்துக்கு எதிரானது என்று என்னை வசைபாடினர். என் முகம் முழுதும் குங்குமத்தை அப்பினர். திடீரென கத்தியை எடுத்து விரல்களை வெட்டி விடுவதாக அச்சுறுத்தினர்” என்றார்.

2014-ல் நடைபெற்ற இவரது புத்தக வெளியீட்டின்போது கலந்து கொண்ட கன்னட எழுத்தாளர் கே.எஸ்.பகவான் - சமீபத்தில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார். வலதுசாரி அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்டித்துப் பேசினார். அவர் மீது உள்ளூர் காவல் நிலையத்தில் அவர்களது ஆத்திரமூட்டும் பேச்சுக்காக புகார் கொடுத்தனர்.

அதன்பின்னர் தாவணகெரே பல்கலைக்கழகத்தில் இதழியல் இளம் எழுத்தாளர் ஹுச்சங்கி பிரசாத் அச்சுறுத்தலுக்கு ஆளானார். அதன்பின்னர் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து 'தி இந்து'விடம் பேசினார்.

தலித் எழுத்தாளரின் புத்தகம். | மருத்துவமனையில் ஹுச்சங்கி பிரசாத்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஹுச்சங்கி. இந்த நேர்காணலின் வாயிலாக தலித் செயல்பாடுகளில் ஈடுபாடு செலுத்திவரும் அவரின் செயல்பாடுகளை முடக்குவதற்காகவே வலதுசாரி அமைப்புகள் இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தாங்கள் எழுத வந்தது எப்படி? அதுவும் தலித் எழுத்தில் இவ்வளவு ஈடுபாடு?

நான் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன் (தாவணகெரே மாவட்டத்தில் உள்ள சாந்தென்பென்னூர்). அங்கு என்னுடைய பெற்றோர் இன்றும் தினக்கூலிகளாகத்தான் வேலை செய்து வருகிறார்கள். நான் பள்ளிக்கு சென்றதில்லை. என்னுடைய இளவயது நாட்களில் கொத்தடிமையாக வேலைசெய்துவந்தேன். நான் சாதிப் பாகுபாடுகளையும் அதன் வன்முறைகளையும் பார்த்திருப்பதோடு அதை எதிர்கொண்டுமிருக்கிறேன். இக்கொடுமையிலிருந்து மீட்கப்பட்டுத்தான் சின்னாரா அங்காலாவில் நான் சேர்க்கப்பட்டேன். அங்குதான் முறையான கல்வியைப் பயின்றேன். என்னுடைய எழுத்துக்கள் சாதிய அமைப்பின் வலிகளை பிரதிபலித்தன.

புதன்கிழமை இரவு உங்களை குறிவைத்து அவர்கள் ஏன் தாக்கவேண்டுமென நினைக்கிறீர்கள்?

2014 ஏப்ரலில் எனது புத்தகம் வெளியானது. அதில் இந்து மதத்திலிருந்து உருவான சாதி அமைப்பு பற்றியும் அதன் தீங்கையும் எழுதியுள்ளேன். என் மீது புகார் கூட அளித்தனர். இதைத்தொடர்ந்து ஒரு மாதமாக தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தேன். அவர்களும் ஆத்திரமூட்டும் பேச்சுக்காகவும் எரிச்சலூட்டும் எழுத்துக்காகவும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். அதிலிருந்து எனது பேச்சும், எழுத்துக்கள் பற்றியும் சமூக ஊடகங்களில் பரபரக்கத் தொடங்கின.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்களை வலதுசாரி குழுவுடன் அடையாளப்படுத்திக் கொண்டனரா?

அவர்கள் செய்யவில்லை. ஆனால் அவர்களது நடத்தையிலிருந்து அது வெளிப்படையாக தெரிந்தது. அவர்கள் என் முகத்தின் மீது குங்குமத்தைத் தூவி உனக்கு இந்து மதத்தில் நம்பிக்கையில்லாதபோது, இந்து மதத்தைப் பற்றி இப்படி எழுத என்ன தைரியம் எனக் கேட்டனர். நான் சென்ற பிறவியில் பாவம் செய்ததால்தான் இந்தப் பிறவியில் தலித்தாகப் பிறந்தேன் என்றும் அவர்கள் கூறினர்.

நான் சமீபத்தில் வாட்ஸ்அப்பில் எழுதி அனுப்பிய செய்திகளின் மூலம் என்னை அறிந்தவர்களாகவே அவர்கள் காணப்பட்டனர். நான் எழுதுவதை நிறுத்துவதற்கு என் கைகளை வெட்டிவிடுவோம் என மிரட்டினர். நான் எப்படியாவது இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

தாக்குதலுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கைகுறித்து அச்சமாக இருக்கிறதா?

ஆமாம், நான் இப்போது மீண்டுவருகிறேன். போலீஸ் பாதுகாப்பும் கேட்டுள்ளேன்.

தாக்குதலுக்குப் பிறகு நீங்கள் எழுதுவதை நிறுத்துவீர்களா ? அல்லது வலதுசாரிகளை எரிச்சலூட்டும் முறையில் எழுதுவதற்கு தயக்கம் ஏற்படுத்தும் வகையில் இந்தத் தாக்குதல் உங்களை பாதிக்குமா?

மாறாக, நான் ஆர்வமாக இருக்கிறேன். உறுதியாக உள்ளேன். ஒருவகையில் தைரியம் கூடியுள்ளது. யாருடைய அச்சறுத்தலுக்கும் அஞ்சமாட்டேன். தொடர்ந்து எழுதுவேன். எழுதும் எனது ஆர்வத்தின் மீது அவர்களது தாக்குதல் தாக்கம் ஏற்படுத்திவிட்டதாக அவர்கள் நினைத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x